Wednesday, November 9, 2011

நம் எண்ணங்கள் அழகானால்....


உலகம் இயற்கையின் படைப்பு. இவ்வுலகத்தில் எல்லாப் பொருட்களும் நம் கண்களுக்கு அழகாகத்தான் இருக்கின்றன. எல்லா உயிரினங்களும் தன்னளவில் முழுமையாகவே உருவாக்கப்பட்டு அழகாகவே திகழ்கின்றன.

எதுவெல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றதோ அதுவெல்லாம் ஒரு குறைபாடும் இல்லாமல் முழுமையாகவே உருவம் பெற்றிருக்கின்றது. எனவே, முழுமையே அழகு. இதுவே படைப்பின் இலக்கணம். இதுவே வாழ்க்கையைப்பற்றி நம் முன்னோர்களின் பார்வையும்கூட.

இந்த அற்புதப் பார்வையைக் கொண்டு நாம் பார்க்கும்பொழுது உலகத்தில் எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன. யாவும் முறையாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

மனிதன் மட்டும் அழகில் ஏற்றத்தாழ்வு கண்டு அசிங்கம் என்ற வார்த்தையைக் கண்டுப்பிடித்திருக்கின்றான். சிலரைக் குரூபி என்று குறைப்படுத்துகின்றான்.

இந்த அழகு மானவுணர்ச்சி மிருகங்களிடையே கிடையாது. ஓர் அழகான, கூர்மையான கொம்புடைய மாடு, ஒரு வளைந்த கொம்புடைய மாட்டைப் பார்த்து முகம் சுளிக்காது. ஒரு சிவப்பு நாய், ஒரு கறுப்பு நாயைப் பார்த்து அவமானப்படுத்தாது. அதனோடு கொஞ்சிக் குலாவுவதை நாம் கண்ணால் பார்த்திருக்கிறோம்.

இந்த அழகு உணர்ச்சியில் அமிழ்ந்து போய்த் தன் இனத்தையே இகழ்ந்த பார்வையோடு பார்ப்பவன் மனிதன் மட்டுமே. சிலர் சிவப்பு அழகு என்று இறுமாந்து இருப்பது, மல்லாந்து படுத்துக்கொண்டு தன் மேலே உமிழ்ந்து கொள்ளும் அவச் செயலுக்குச் சமமாகும். புற அழகை மட்டும் பார்க்கின்ற சில மூடர்கள் இந்தத் தோலை அழகு படுத்துவதுதான் தங்கள் சுயமதிப்பை உயர்த்திக்கொள்ளும் சாதனம் என்று நினைக்கிறார்கள்.

சிந்தனை, சொல், செயல் அழகே மனிதனுக்குப் பேரழகு என்று நமது பெரியோர்கள் சிந்திக்கின்றனர். எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் கனிவாகும். வார்த்தைகள் கனிவாக வந்தால் செயல்கள் சீராக அமையும். அன்பையும் அறிவையும் அணியத் தெரியாதவர்கள்தாம் அணிகலன்களை அணிந்து தங்கள் அசிங்க ஓட்டைகளை அடைக்கப் பார்க்கிறார்கள்.

சமுதாயம் உடல் அழகு உள்ளவர்களை மட்டும் மதிப்பதில்லை. அவர்கள் நடத்தை நேராக இருக்கிறதா? சொற்கள் பணிவாக வருகிறதா? செயல்கள் சீராக இருக்கிறதா? என்று பார்த்துத்தான் ஒரு மனிதனை எடை போடுகிறது. உடல் அழகு மட்டும் நமக்கு உயர்வைத் தருவதில்லை. மன அழகே மாதவம்.

வார்த்தை ஜாலங்கள் புரிபவர்களை யாரும் இரசிப்பதில்லை. வார்த்தைகளால் கொட்டுபவர்களையும் யாரும் விரும்புவதில்லை. வண்ணங்கள் அழகானால் மண்ணுலகம் அழகாகும். எண்ணங்கள் அழகானால் விண்ணுலகம் வியந்து நிற்கும். வார்த்தைகள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும். இது புரியாதவர்கள் மேல் தோலுக்கு என்னதான் சாயம் பூசினாலும் அவர்கள் வெளுக்கமாட்டார்கள். "மனம் வெளுக்க மார்க்கம் மன ஒழுக்கம்" என்கிறார் பாரதியார்.

பணிவுடையன் இன்சொலன் ஆதற் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற குறள் 95

"இனிமையான வார்த்தைகளும் பணிவான நடத்தையுமே ஒருவனுக்கு சிறந்த அணிகலன்கள். அவன் உபயோகிக்கும் அழகுச் சாதனங்கள் அல்ல, " என்கிறார் திருவள்ளுவர். முகத்துக்குச் சாயம் பூசும் மனிதனுக்குச் சில சமயங்களில் மனத்திற்கு வெள்ளை அடிக்கத் தெரிவதில்லை.

அழகு என்பது மன உணர்ச்சி. இதை அழகுச் சாதனங்களால் மெருகு படுத்தமுடியாது. அழகு என்பது எது சதா மனதுக்கு மகிழ்ச்சியை ஊட்டுவதோ, அது என்கிறான் ஒரு ஆங்கிலக் கவிஞன். கீழான உள்ளக் கிளர்ச்சியோ உடல் தினவோ அல்ல அழகு. கண்ணதாசன் அழகு என்பது உடல்களின் தாளம் அல்ல, ஆத்மாவின் இராகம் என்கிறார்.

இந்த உலகத்தைப் பற்றி நமது ரிஷிகளின் பார்வையோ விசித்திரமாக இருக்கின்றது. இந்த விநோதமான பார்வையைக்கொண்டு இந்த உலகத்தைப் பார்க்கும்பொழுது இங்கு நம்மைவிட அழகானவர்கள் யாருமே கிடையாது. இந்த உலகத்தைவிட அழகான இடம் எங்குமே இருக்க முடியாது என்ற எண்ணம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நம்மை அறியாமலேயே ஆழமாகப் பதிந்திருக்கின்றது.

அனைத்தும் அழகு. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வுலகம் அழகு. நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாழ்வும் அழகு. நமக்கு ஏற்பட்டிருக்கின்ற உறவுகள் அனைத்தும் அழகு. அழகு! அழகு! அழகைத் தவிர்த்து வேறேதும் இங்கு இல்லை. அனைத்திலும் அழகைப் பார்க்கின்றனர்; பார்த்து ரிஷிகள் கோஷமிடுகிறார்கள். அவர்கள் பார்க்கின்ற அழகு மேலோட்டமான சிவப்பழகு மட்டுமல்ல. கண்களில் படுகின்ற அழகு அனைத்தையும் தாண்டி அதற்குப் பின்னால் ஒளிந்துக்கொண்டிருக்கின்ற கறுப்பழகைக் கண்டனர். இந்த அழகில் கண்ணனைத் தரிசித்தனர். இறைவனே ஒவ்வோர் உயிரிலும் சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டனர். மனம் மலர்ந்து ஆராதனை செய்தனர்.

நம்முடைய அனுபவம் மட்டும் என்னவாம்? சற்றே சிந்தித்துப் பாருங்கள். இயற்கையைப் பார்த்தாலே நம்முள் இனம் புரியாத மலர்ச்சி.

ஒரு மரத்தைப் பாருங்கள்...
அது பூத்துக் குலுங்கும்போது நம் உள்ளமும் கூத்தாடவில்லையா?

ஒரு செடியைப் பாருங்கள்...
அது இளம் தளிர்களைத் துளிர்விடும்பொழுது அந்தப் பச்சை வர்ணம் நம்முள் ஒரு பேரமைதியை மலர வைக்கவில்லையா?

ஓர் ஆற்றைப் பாருங்கள்..
அது மிக வேகமாக ஓடிக்கொண்டிருப்பது எதையோ தேடி எந்த ஓய்வும் இன்றி மகிழ்ச்சியாய்ப் போய்க்கொண்டிருப்பதாகப் படவில்லையா?


இயற்கை அன்னை தினமும் நமக்குப் பாடம் நடத்துகிறாள். நாம்தான் செயற்கையை அள்ளி முகத்தில் அப்பிக்கொண்டு தட்டுத்தடுமாறி நிற்கின்றோம். அப்பியது கண்களில் என்று தெரியாமலா? அல்லது தெரிந்தும் தெரியாமலா?

No comments:

Post a Comment